×

கோடை கால பயிர் சாகுபடியை ஸ்டாமின் இயக்குனர் ஆய்வு விவசாயிகளிடம் கலந்துரையாடல் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், மே 9: வேலூர் மாவட்டத்தில் கோடைக்கால பயிர் சாகுபடி குறித்து மாநில வேளாண் நிர்வாக விரிவாக்க பயிற்சி மையம் (ஸ்டாமின்) இயக்குனர் சங்கரலிங்கம் களஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் மானாவரி பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் கோடைக்காலங்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத மணிலா, சோளம், சாமை போன்ற பயிர்களை விவசாயிகள் நாடுகின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கோடைக்கால பயிர் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக மாநில வேளாண் நிர்வாக விரிவாக்க பயிற்சி மையம்(ஸ்டாமின்) இயக்குனர் சங்கரலிங்கம் நேற்று வேலூர் வந்தார்.

இங்கு அவர் கே.வி.குப்பம் வட்டாரத்தில் மாச்சனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் களஆய்வு மேற்கொண்டார். மாச்சனூரில் விவசாயி தினேஷ் என்பவரை சந்தித்து சமீபத்திய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். அதேபோல் அக்கிராம விவசாயிகளிடம், அவர்களது வருவாய் உயர காலத்துக்கேற்ற பயிர்களை நடவு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். அதேபோல் இளம் விவசாயிகளுக்கு தேவையான பயிற்சியை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து குடியாத்தம் வட்டாரத்தில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்களை உரிய நேரத்தில் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான களப்பணியாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரசின் முக்கிய திட்டங்களான கோடைக்கால பயிர் சாகுபடி, பயிர் சாகுபடியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்தார். அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மண் மாதிரி எடுத்தல், மண்வள அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் வேளாண் இணை இயக்குனர் சோமு, வேளாண் உதவி இயக்குனர் லட்சுமணன் உட்பட அனைத்து வேளாண் உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

The post கோடை கால பயிர் சாகுபடியை ஸ்டாமின் இயக்குனர் ஆய்வு விவசாயிகளிடம் கலந்துரையாடல் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : STAM ,Vellore district ,Vellore ,Sankaralingam ,State Agricultural Management Extension Training Center ,STAMIN ,Manavari ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...